வணிகவியல் அகராதி என்னும் இவ்வகரமுதலி, இத்துறையில் முதன் முதலில் வெளிவரும் அகராதி.பதிப்பு ஆசிரியரும் தமிழ் வேருமாகிய முனைவர் ச.மெய்யப்பன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின், முழு நேரமும் தமிழுக்கு முழுதும் பயனுள்ள நூல்களை வெளியிட்டு வருவது அனைவரும் பாராட்டி வரவேற்கத்தக்க முயற்சியாகும். அதன் விளைவுகள் இரண்டாக மலர்ந்தவையே அறிவியல் அகராதியும், வணிகவியல் அகராதியும் ஆகும்.வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆகிய இரு துறைகளின் சொற்கள் 1500 திரட்டப்பட்டு, அவற்றிற்கு வாசகர்களை மையமாகக் கொண்டு எளிய விளக்கம் தரப்பட்டுள்ளது. இவ்விரு துறைகளோடு தொடர்புடைய பொருளியல், வங்கி இயல், காப்புறுதி முதலிய துறைகள் சார்ந்த சொற்கள் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.கணக்கெழுதுங்கலை தமிழில், தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வரும் கலையே.கணிப்பொறித் தாக்கம் பெறாத எத்துறையும் இக்காலத்தில் இல்லை. ஆகவே, அத்துறைச் சொற்களும் சில, வேண்டிய இடத்துச் சேர்க்கப்பட்டுள்ளன. அண்மைக்காலத்தில் இத்துறையில் அறிவியல் தாக்கம் பெற்ற உலர் நகலி, உருநகலி, தொலை யதிர்வச்சு, உருக்காட்சி முதலிய பல சொற்களும் பதிவு பெற்றுள்ளன.கலைச் சொற்களை அளவை செய்யும் நெறிமுறைகள், இவ்வாசிரியர் நிலைபேறுள்ளதாக உருவாக்கியுள்ள அறிவியல் அகராதியில், அறிஞர்கள் ஏற்புடன் பின்பற்றிய சீரிய நெறி முறைகளே ஆகும். அவற்றை அவ்வகர முதலியில் கண்டு கொள்க.அறிமுறைமட்டும் விளக்கப்பட்டுள்ள வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய இவ்விருதுறைகள் பற்றி அனைவரும் குறிப்புதவி பெற, இவ்வகரமுதலி பெரிதும் பயன்படும். தமிழ்மட்டும் கற்றவர் நலங்கருதித் தமிழ்ப் பொருளடைவும் கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வகர முதலியை, அறிவியல் அகராதியை அடுத்து, மிகக் குறுகிய காலத்தில் வெளியிட்டுள்ள பதிப்பாசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்களுக்குத் தோன்றாத் துணையாகவுள்ள மேலாளர் திரு. இரா. குருமூர்த்தி அவர்களுக்கும் இவ்வாசிரியனின் நன்றியும் வணக்கமும் உரியவாகுக. வாசகர் களை மையமாகக் கொண்ட இவ்வகர முதலிபற்றி அவர்கள்தம் கருத்தேற்றங்கள் பெரிதும் இனிது வரவேற்கப்படுகின்றன."மெய்ப்பொருள் காண்ப தறிவு"அ.கி. மூர்த்தி